அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை மூடி மறைக்கும் அரசு: ராமதாஸ் கண்டனம்

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்கி விட்டதாக விளம்பரம் செய்வதால் மட்டுமே சமூகநீதி தழைத்து விடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-21 07:59 GMT

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின்படி, ஆகமக் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியும், அவமரியாதையும் சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் தொடர்கின்றன. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சரி செய்ய வேண்டிய தமிழக அரசு, அனைத்து அவமதிப்புகளையும், அநீதிகளையும் மூடி மறைக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆகமக் கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்படி 24 அர்ச்சகர்கள் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நியமிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் தங்களுக்கு பூசை செய்யும் உரிமை வழங்கப்படவில்லை என்றும், பரம்பரை அர்ச்சகர்களால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியதாக தி டி.ட்டி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. தைலாபுரத்தில் கடந்த 19ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த போது, இதை சுட்டிக்காட்டிய நான்,'' இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு விட்டது என்று ஆட்சியாளர்கள் கூறினார்கள். ஆனால், அனைத்து சாதி அர்ச்சகர்கள் அவமானப்படுத்தப்படுவதை வேடிக்கைப் பார்ப்பதன் மூலம் தந்தை பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு'' என்று குற்றஞ்சாட்டியிருந்தேன். அதன்பிறகாவது அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி துடைக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்கவில்லை.

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன. காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றில் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட இடைநிலை சாதியைச் சேர்ந்த ஒருவர், பரம்பரை அர்ச்சகரின் கொடுமையும், அவமதிப்பும் தாங்க முடியாமல் விடுப்பில் செல்வதாகக் கூறி விட்டு, சொந்த ஊருக்கு சென்று விட்டதாக தி டி.ட்டி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.''நியமன ஆணை வழங்கப்பட்ட பிறகு முதல் நாள் என்னை பூசை செய்ய வைத்து படம் பிடித்தனர். அது தான் நான் முதலும், கடைசியுமாக செய்த பூசை. நான் பூசை செய்தால், அந்த கடவுள் சிலையை தொட மாட்டேன் என்று பரம்பரை அர்ச்சகர் மிரட்டியதால் அறநிலையத்துறை அதிகாரிகள் எதுவும் செய்ய மறுக்கின்றனர்'' என்று அந்த அர்ச்சகர் கூறியிருக்கிறார். இது அவருடைய குமுறல் மட்டுமல்ல. 24 அனைத்து சாதி அர்ச்சகர்களும் இதே நிலையில் தான் வெந்து கொண்டிருக்கின்றனர்.

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அவமதிப்புகள் குறித்து செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆணையிட்டுள்ளார். இந்த விசாரணை அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு விடியலைத் தரும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றத்தை மட்டுமே தந்திருக்கிறது. விசாரணை என்ற பெயரில் கோயில்களுக்கு வரும் அதிகாரிகள், அனைத்து சாதி அர்ச்சகர்களை அழைத்து, சிரித்தபடியே போஸ் கொடுக்கும்படி கூறுகின்றனர். அவர்களை படம் பிடித்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்றும், எந்தக் குறையும் இல்லை என்பது போன்றும் தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.''அரசின் விளம்பரத்திற்காக நாங்கள் பகடைக்காய்களாக்கப் படுகிறோம். நாங்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அதைப் பற்றி கவலைப்படாத அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் புரட்சிகரமானது; புகழ்பெற்றது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு தான் முயல்கிறது'' என்று பாதிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் கூறியிருப்பதிலிருந்தே அரசின் மோசடியை உணர்ந்து கொள்ளலாம்.

அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் ஏட்டளவில் புரட்சிகரமான திட்டம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், அதை அரசு எந்த அளவுக்கு செயல்படுத்துகிறது என்பதைப் பொறுத்து தான் தந்தைப் பெரியாரின் கனவுக்கு அது நியாயம் சேர்க்கிறதா அல்லது துரோகம் செய்கிறதா? என்பது உறுதியாகும். முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, இப்போதைய திமுக ஆட்சியில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் சமூகநீதியில் பெரும்புரட்சி செய்து விட்டதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் முதல் அமைச்சர், இந்தத் திட்டத்தை வெற்றிகரமானதாக மாற்ற இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன?

1. அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பது குறித்து கடந்த 37 மாதங்களில் ஒருமுறையாவது ஆய்வுக்கூட்டத்தை முதல் அமைச்சர் நடத்தியிருப்பாரா?

2. அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்படி நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அவமதிப்புகள் குறித்து அளித்த புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

3. அனைத்து சாதி அர்ச்சகர்கள் பூசை செய்த கடவுள் சிலைகளுக்கு நாங்கள் பூசை செய்ய மாட்டோம் என்று பரம்பரை அர்ச்சகர்கள் போர்க்கொடி உயர்த்தினால் அவர்களை இட மாற்றம் செய்து விட்டு, அந்த இடத்தில் பூசை செய்யும் உரிமையை அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கே வழங்க முடியாதா? அதை செய்ய தமிழக அரசு தயங்குவது ஏன்?

4. மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோவில், திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில் ஆகிய கோவில்களில் மட்டும் அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகள் நடைபெற்று வந்த நிலையில், திமுக ஆட்சியில் கூடுதலாக திருப்பெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் தொடங்கப்பட்டதாக திமுக அரசு அறிவித்தது. இந்த 7 பயிற்சிப் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் எத்தனை பேர்?

5. அவர்களில் எத்தனை பேர் கடந்த மூன்றாண்டுகளில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்?

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்கி விட்டதாக விளம்பரம் செய்வதால் மட்டுமே சமூகநீதி தழைத்து விடாது, சமத்துவம் மலர்ந்து விடாது. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு உரிய உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட்டால் தான் உண்மையான சமத்துவம் மலரும். எனவே, இந்த விவகாரத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு, அனைத்து சாதி அர்ச்சகர்களும் அவர்களுக்குரிய உரிமை, மரியாதை ஆகியவற்றுடன் கோவில்களின் கருவறைகளில் பூசை செய்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்