சிவகார்த்திகேயனின் நடிப்பு என்றும் பேசப்படும்: செல்வப்பெருந்தகை பாராட்டு
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இது வாழ்நாள் கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை வைத்து உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயனை மிகச் சிறப்பாக நடிக்க வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படத்தை பார்க்கிற அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படத்தை பார்த்து மட்டற்ற மகிழச்சியும், மன நிறைவும் அடைந்தேன். இந்த படத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இது வாழ்நாள் கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. மிடுக்கான தோற்றப் பொலிவு, கச்சிதமான நடிப்பு, சண்டைக் காட்சிகளில் கடுமையான உழைப்பு, வீரத்தையும், தியாகத்தையும் ஒருசேர உணர்த்துவதில் அபார சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். காலத்தால் அழியாத கருவூலமாக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. அவரது நடிப்பு என்றும் பேசப்படும், போற்றப்படும்.
அமரன் திரைப்படம் பயங்கரவாதத்தை முறியடிக்க, நமது ராணுவ வீரர்கள் தங்களது உயிரை துச்சமென நினைத்து நாட்டுப் பற்றோடு எத்தகைய தியாகத்தை செய்ய முனைகிறார்கள் என்பதை இத்திரைப்படம் மிக நேர்த்தியாக உணர்த்துகிறது. இப்படத்தில் கமல்ஹாசன் நடிக்காமல் சிவகார்த்திகேயனுக்கு அந்த அரிய வாய்ப்பை வழங்கி நடிக்க வைத்து, தயாரித்ததன் மூலம் அவரது நம்பிக்கை அபார வெற்றி பெற்றிருக்கிறது.
இத்திரைப்படத்தில் எல்லோரையும் நடிக்க வைத்து சாதனை படைத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் மனைவியாக நடித்த சாய்பல்லவி, படத்தை பார்க்கிறவர் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறார். அவர் நடிக்கவில்லை. கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அனைவரது பாராட்டையும் வெற்றிருக்கிறார்.
அமரன் திரைப்படத்தை இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும். இத்திரைப்படத்தை பார்ப்பதன் மூலமாக அவர்களிடையே நாட்டுப் பற்று நிச்சயம் வளரக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இது இன்றைய காலத்தில் மிக மிக அவசியமாகும். இத்திரைப்படத்திற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து, தமிழக மக்கள் அனைவரும் பார்க்கக் கூடிய வாய்ப்பை வழங்குகிற வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அதேநேரத்தில், அனைத்து பள்ளி மாணவர்களும் பார்க்கிற வகையில் கல்வித்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பி அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமேயானால், மாணவர்களிடையே தேசபக்தி உணர்வை மேலோங்க செய்வதற்கு இதைவிட ஒரு அரிய வாய்ப்பு நமக்கு கிடைக்காது. எனவே, முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.