மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

ம.நீ.ம. நிர்வாகிகள் பதவிகளுக்கு ஆசை கொள்ளவேண்டும் என கமல்ஹாசன் பேசினார்.

Update: 2024-09-21 08:33 GMT

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம், கமல்ஹாசன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், உறுப்பினர்களான சினேகன், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2570 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மீண்டும் கமல்ஹாசனை தேர்வுசெய்தது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் பின்னர் நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் உரையாற்றியதாவது;

"உயிரே.. அன்பே, உங்களை நான் உயரத்தில் வைத்துள்ளேன். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சின்ன சின்ன பதவிகளுக்கு ஆசை கொள்ள வேண்டும். நான் 4 வயது முதல் மேடையை பார்த்து வருகிறேன். வீரமும் நேர்மையும் இருக்கிறதா என என்னையே கேட்டுக்கொள்பவன் நான். சாதித்துவிட்டேன் என கூறவில்லை. சாதிக்க முடியும் என கூறுகிறேன்.

தோல்வி என்பது நிரந்தரமானது அல்ல, பிரதமர் பதவியும் நிரந்தரமானது அல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது. அது தவறு என்பது உலக அரசியலுக்கு தெரியும். இந்தியாவிலேயே நேர்மையான மாநிலம் தமிழ்நாடுதான். நேர்மையானவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அதிக வரி கட்டுகிறோம். மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும். நான் அரசியலுக்கு வந்தது எனக்காக அல்ல, நமக்காக கூட அல்ல.. நாளைக்காக."

இவ்வாறு அவர் பேசினார்.  

Tags:    

மேலும் செய்திகள்