மதுரையில் நடந்தது கள ஆய்வு அல்ல, வெறும் 'ரோடு ஷோ'தான் -ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரையில் நடந்தது முதல்-அமைச்சரின் கள ஆய்வு அல்ல, வெறும் ரோடு ஷோதான் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.

Update: 2023-03-07 20:53 GMT


மதுரையில் நடந்தது முதல்-அமைச்சரின் கள ஆய்வு அல்ல, வெறும் ரோடு ஷோதான் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.

பொதுக்கூட்டம்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி அரியூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கொரியர் கணேசன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், டாக்டர் சரவணன், கருப்பையா, மாநில ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன் மற்றும் திருப்பதி, வக்கீல் தமிழ்ச்செல்வன், ராமகிருஷ்ணன், அன்பழகன், செல்லம்பட்டி ராஜா முருகேசன், அசோக், ராஜேஷ் கண்ணா, சரவணபாண்டி, ஆர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆர்.பி உதயகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியாக இருந்த போது 520 தேர்தல் வாக்குறுதியை அளித்தார். அதில் இன்னும் 25 சதவீதம் தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறுகிறார். இது தவறான தகவல். அவர் எதையுமே நிறைவேற்றவில்லை என்பதுதான் உண்மை. சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவை மூலம் இன்றைக்கு மக்கள் துன்பத்தில்,வேதனையில் இருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், மண்டல அளவில் கள ஆய்வு என்று ரோடு ஷோ நடத்தி கொண்டு இருக்கிறார். ஆங்காங்கே மக்களை நிற்க வைத்து மனுக்களை பெறுவதுபோல் சூட்டிங் நடத்துகிறார்.

அறிவுரை

ஒவ்வொரு தொகுதிகளிலும் தி.மு.க. நிறைவேற்றுவதாக சொன்ன வாக்குறுதிகள் நிலுவையில் இருக்கிறது, கள ஆய்வில் விவசாயிகளை சந்தித்தேன், தொழில் முனைவோர்களை சந்தித்தேன், மாணவர்களை சந்தித்தேன், மகளிர் சுய உதவி குழுவை சந்தித்தேன் என்று முதல்-அமைச்சர் கதை சொல்கிறார். ஆனால் அவர்களுடைய கோரிக்கை எதுவும் நிறைவேறவில்லை. தென் மாவட்டத்தின் நுழைவுப் பகுதியாகி இருக்கும் கப்பலூர் டோல்கேட்டை அகற்றுவேன் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின், அதை நினைவூட்டுகிற வகையில்அந்த மீட்பு குழுவினர் மனுக்கள் கொடுக்கும் போது அதை வாங்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்த எந்த அளவில் உறுதியாக இருக்கிறார் என்பதற்கு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இது எடுத்துக்காட்டாக உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை மட்டும் தான் வழங்கி உள்ளார், அது ஆய்வு கூட்டம் அல்ல. அதிகாரிகளுக்கு அறிவுரை சொல்ல சென்னை, செங்கல்பட்டில் இருந்து கூட கூறலாம். இது கள ஆய்வு கூட்டமா, அறிவுரை கூட்டமா என்று மக்களிடத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. கள ஆய்வில் மக்களுக்கான திட்டங்களுக்கு விடை காண முடியவில்லை, இனிவரும் காலங்களில் மக்களுக்கான திட்டங்களை பற்றி சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்