புத்தகம் படிக்கும் பழக்கத்தால்தான் நாம் வளர்ச்சியடைய முடியும்

புத்தகம் படிக்கும் பழக்கத்தால்தான் நாம் வளர்ச்சியடைய முடியும் என கள்ளக்குறிச்சியில் நடந்த புத்தகத்திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Update: 2022-12-15 18:56 GMT

புத்தகத்திருவிழா

கள்ளக்குறிச்சி நீலமங்கலம் சென்னை பைபாஸ் திடலில் மாவட்ட நூலக துறையின் சார்பில் கல்லை புத்தகத்திருவிழா 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது. நேற்று நடைபெற்ற தொடக்க விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புத்தகத்திருவிழாவுக்கான அரங்கத்தை திறந்து வைத்து புத்தகம் ஒன்றை வாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கல்விக்கு முக்கியத்துவம்

புத்தகம் படிக்கும் பழக்கத்தினால் தான் நாம் வாழ்வில் வளர்ச்சியடைவதோடு, நமது பொருளாதாரமும் வளர்ச்சி அடைய முடியும். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் படி, படி என்று சொன்னார்கள். ஒரு புத்தகம் தான் மனிதனை பண்படுத்தும். கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் புத்தக பதிப்பாளர்களுடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளுடன் இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. இந்த திராவிட மாடல் அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால் தான் தொடர்ந்து கல்வித்துறையின் சார்பில் கலைத்திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடத்துவதற்காக முதல்-அமைச்சர் ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

வாழ்வில் வெற்றி பெறவேண்டும்

தமிழ்நாடு பாடநூல் கழக துணை இயக்குனர், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து புத்தகத் திருவிழாவை நடத்துகிறார்கள். இவ்விழாவில் பொதுமக்கள் மற்றும் அரசு, தனியார் அலுவலர்கள் அனைவரும் புத்தகங்களை வாங்கிச் சென்று உங்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் தான் இலவச மருத்துவ பரிசோதனை முகாம், உணவுத்திருவிழா, குழந்தைகளுக்கான விளையாட்டுகள் கொண்ட பன்முக புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் புத்தகத்திரு விழாவில் பங்கேற்று புத்தகங்களை வாங்கி வாழ்வில் வெற்றி பெறவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பட்டிமன்றம்

அதைத்தொடர்ந்து பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மருத்துவ முகாமை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பார்வையிட்டார். இதன் பிறகு விழாவில் திண்டுக்கல் லியோனி தலைமையில் சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது ஆர்வமிகு இளமையே! அனுபவம் மிகு முதுமையே என்ற தலைப்பில் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி, கோட்டாட்சியர் பவித்ரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்

பணிகள் திட்ட அலுவலர் செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், பப்பாசி தலைவர் வைரவன், செயலாளர் முருகன், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர் சுப்ராயலு, ஒன்றியக்குழு துணை தலைவர் விமலா முருகன் மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்