சிவதாபுரத்தில் 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் சிவதாபுரத்தில் 100 வீடுகளுக்குள் புகுந்தது.

Update: 2022-10-21 19:45 GMT

சூரமங்கலம்:-

சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் சிவதாபுரத்தில் 100 வீடுகளுக்குள் புகுந்தது.

சேலத்தாம்பட்டி ஏரி

சேலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளன. மேலும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது,

குறிப்பாக சேலம் சிவதாபுரம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக உபரிநீர் வழிந்தோடுகிறது. இந்த தண்ணீர் செல்வதற்கு பாதை இல்லாததால், அடிக்கடி சிவதாபுரம் ஊருக்குள் புகுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

100 வீடுகள்

இந்த நிலையில் சேலம் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் நேற்று காலை 10 மணி அளவில் திடீரென்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் சிவதாபுரம் மெயின் ரோடு, சிவதாபுரம் சந்தை பகுதி மொரம்புக்காடு, மெய்யந்தெரு சாலை ஆகிய பகுதிகளில் தேங்கி நின்று இருந்ததுடன், அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்தது. சுமார் 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் சிவதாபுரம் மெயின் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்றனர். சாலையோர உள்ள கடைகளில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ஒரு சில கடைகளுக்குள் தண்ணீர் உள்ளே புகுந்தது. அதனை மோட்டார் வைத்து வெளியேற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நிரந்தர தீர்வு

இது குறித்த சிவதாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் நாங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறோம், சேலத்தாம்பட்டி ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரானது சாலைகளில் தேங்கி வீடுகளில் புகுந்து விடுகிறது, இதனால் இங்கு வசிப்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் மிகவும் பாதிப்படைகிறோம்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு நிரந்தரவு தீர்வு காண வேண்டும். மேலும் இந்தப் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாரி மழை தண்ணீர் சாலைகளில் மற்றும் வீடுகளுக்குள் செல்லாமல் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சேறும்-சகதியுமாக மாறியது

இந்த நிலையில் நேற்று மதியம் சேலம், அம்மாபேட்ைட, உடையாப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட்டில் இருந்து அம்மாபேட்டை பஸ் நிறுத்தம் வரை பாதாளசாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. நேற்று பெய்த மழையால் அந்த பகுதி முழுவதும் சேறும்-சகதியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தம்மம்பட்டி-12, எடப்பாடி-12, ஆத்தூர்-7.6, சங்ககிரி-6.4, வீரகனூர்-4, பெத்தநாயக்கன்பாளையம்-3.6, மேட்டூர்-3.4, அணைமடுவு-3, ஏற்காடு-1.2, சேலம்-1.

Tags:    

மேலும் செய்திகள்