நீர்நிலைகளை தனிநபர்கள் உரிமை கோர முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நீர்நிலைகளை தனிநபர்கள் உரிமை கோர முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-05 21:16 GMT


நீர்நிலைகளை தனிநபர்கள் உரிமை கோர முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நீர்நிலை ஆக்கிரமிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த பாலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் கிராமம் பிரான்மலை பகுதியில் அமைந்துள்ளது. இது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். வறண்ட பகுதியான இங்குள்ள சிறிய குளங்களில் மழைக்காலங்களில் சேமிக்கப்படும் தண்ணீர்தான் கிராம மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் பயன்படுகின்றது. இங்குள்ள சின்னகருப்பன் ஏந்தல் கண்மாய், தச்சன் ஊருணி நீரைத்தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்தநிலையில் இந்த நீர்நிலைகள் அடங்கிய பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். அதுகுறித்து கேட்டபோது, 25 வருடங்களுக்கு முன்பே அந்த இடத்தை கிரையம் செய்ததாக கூறுகின்றனர். அங்கு பல்வேறு மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.

இதனால் எங்கள் கிராமத்தினரின் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வனவிலங்குகள் தண்ணீருக்காக கிராமத்துக்குள் புகுந்து, குழந்தைகள், பெண்களை தாக்குகின்றன. இதனால் கிராமத்தில் ஒருவித பயத்துடன் வாழும் நிலை ஏற்பட்டு உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பினால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை.

எனவே சின்னகருப்பன் ஏந்தல் கண்மாய், தச்சன் ஊருணி மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழைய நிலைக்கு மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

உரிமை ேகார முடியாது

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த நீர்நிலை பகுதியில் உள்ள நிலங்களை தங்களின் முன்னோர்கள் அனுபவ பாத்தியத்தில் வைத்திருந்ததாக தனிநபர்கள் கூறுவதை ஏற்க இயலாது. நீர்நிலை பகுதிகளுக்கு தனிநபர்கள் உரிமை கோர முடியாது. அந்த நீர்நிலையை உடனடியாக உள்ளாட்சி நிர்வாகம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

நீர் நிலையாகவே இந்த பகுதியை பராமரிக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்