அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு போலீஸ் சூப்பிரண்டிடம் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் புகார்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் புகார் அளித்தனா்.

Update: 2023-09-06 18:45 GMT

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் விழுப்புரம் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அந்த அமைப்பினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். அவரது பேச்சானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகத்தின் பல்வேறு பிரிவினர் இன்றைக்கு சனாதன தர்மத்தின் பல்வேறு கூறுகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறார்கள். பல்வேறு அறிஞர்கள் சனாதன தர்மத்தின் விஞ்ஞானப்பூர்வமான விழுமியங்களை வியந்து பாராட்டி வருகிறார்கள். சனாதன தர்மத்தில் சாதி, பாகுபாடுகள் எங்கும் முன்நிறுத்தப்படவில்லை. உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று எங்கும் சொல்லப்படவில்லை. சமூகத்தில் நேர்மையையும், தர்மத்தையும் நிலைநிறுத்த காலத்தால் அழிக்க முடியாத வாழ்வியலாக உள்ளது. இந்து சனாதன தர்மத்தை உயர்வாக நம்புகிறவர்கள் அதை கடைபிடித்து வாழ்ந்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு, இந்துக்களின் மீது வெறுப்பை உமிழ்வதாகவே அமைந்துள்ளது. அவரது பேச்சு எங்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீபத்தில்கூட உச்சநீதிமன்றமானது, வெறுப்பு பேச்சை யார் பேசினாலும் அரசாங்கம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது. எனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதான இந்த புகாரை பெற்றுக்கொண்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்