விருதுநகர் அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

விருதுநகர் அருகே நடைெபற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்.

Update: 2023-10-25 18:52 GMT

விருதுநகர் அருகே வடமலைகுறிச்சியில் அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமையில் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு தங்கம், இலவச மிக்சி கிரைண்டர், லேப்டாப், மாணவர்களுக்கு சீருடை என பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜெயலிலதா வழங்கினார். தி.மு.க. அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி கொரோனா காலத்தில் ரூ.2,500, நிவாரண உதவியாக 25 கிலோ அரிசி ஆகியவற்றை வழங்கினார். நீட் தேர்வு ரத்து ஆகாது என தெரிந்தவுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் இட ஒதுக்கீடு தந்து மருத்துவ படிப்புக்கான கட்டணத்தையும் அரசே செலுத்தும் என்று அறிவித்தார்.

தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரியை பெற்று தந்ததுடன் விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலையில் நான் கேட்டதற்கு இணங்க மருத்துவக்கல்லூரியினை கட்டி தந்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் 22 மினிகிளினிக்குகளை திறந்தார். தி.மு.க. இனி பெண்களையும், மக்களையும் ஏமாற்ற முடியாது.

வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 இடங்களில் வெற்றி பெறுவதோடு சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமி பிரதமராகவும் வாய்ப்பு ஏற்படும். அவர் சுட்டிக்காட்டுபவரே பிரதமராகும் நிலை ஏற்படும். எனவே வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக 52 அடி உயர அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வடக்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் மச்ச ராஜா செய்திருந்தார். கூட்டத்தில் விருதுநகர் நகர செயலாளர் முகமது நயினார், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தங்க மாரியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்