விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் மே 1-ந் தேதி மிஸ்கூவாகம் அழகிப்போட்டி

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் மே 1-ந் தேதி மிஸ்கூவாகம் அழகிப்போட்டி நடைபெறுகிறது என்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பினர் கூறினர்.

Update: 2023-04-06 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரத்தில் நேற்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவி மோகனாம்பாள், ஒருங்கிணைப்பாளர் அருணா, இணை செயலாளர் சுபிக்ஷா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகளுக்கான கலைநிகழ்ச்சிகள், மிஸ் கூவாகம் போட்டிகளை தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் நடத்தி வருகிறோம். தற்போது மாவட்டம் பிரிக்கப்பட்டதையொட்டி இந்த ஆண்டு நிகழ்ச்சிகளை 2 மாவட்டங்களிலும் 50 சதவீதம் பகிர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மிஸ் கூவாகம் அழகிப்போட்டி

அதன்படி வருகிற மே மாதம் 1-ந்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் மிஸ் கூவாகம் 2023-க்கான அழகிப்போட்டியின் முதல் மற்றும் 2-ம் சுற்றுப்போட்டிகளும், திருநங்கைகளுக்கான கலைநிகழ்ச்சிகளும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

அதனை தொடர்ந்து அன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை மிஸ் கூவாகம் இறுதி சுற்றுப்போட்டி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தளபதி திடலில் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு பட்டம் சூட்டுகின்றனர்.

50 சதவீத நிகழ்ச்சிகளை உளுந்தூர்பேட்டையில் நடத்துவதால் யாரும் மனவருத்தப்பட வேண்டாம். ஏனெனில் கூவாகம் கோவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருப்பதால் அங்குள்ள மக்களின் கோரிக்கைகளை ஏற்று 50 சதவீத நிகழ்ச்சிகளை அங்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

அனைவருக்கும் வீடு

உலக புகழ்பெற்ற திருவிழாவாக நடைபெறும் கூவாகம் திருவிழாவை யுனெஸ்கோ அளவில் அங்கீகரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநங்கைகளுக்கென்று தனியாக வீடு, நிலையான முகவரி இல்லாததால்தான் பிச்சையெடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும். அதுபோல் கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழிலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். குறிப்பாக அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் திருநங்கைகளை அவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்காக தனி சட்டம் கொண்டு வந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின்போது விழுப்புரம் மாவட்ட தலைவர் ராதாம்மாள், துணைத்தலைவர் குயிலி, செய்தி தொடர்பாளர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

கூவாகம் திருவிழா சமயத்தின்போது மட்டும்தான் தங்கும் விடுதிகளில் அறை வாடகையை 3 மடங்கு, 4 மடங்கு என உயர்த்தி விடுகின்றனர். சாதாரண நாட்களில் ரூ.2 ஆயிரம் வாடகை என்றால் இத்திருவிழா சமயங்களில் ரூ.8 ஆயிரம் வரை கேட்கின்றனர். இன்றைய பொருளாதார சூழலில் எங்களுக்கு அவ்வளவு தொகை கட்டுப்படியாகாது. அரசுத்துறை, காவல்துறை, பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிற நிலையில் தங்கும் விடுதி உரிமையாளர்களின் ஆதரவு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே இத்திருவிழா சமயங்களில் தங்கும் விடுதிகளில் பல மடங்கு வாடகை வசூல் செய்வதை தடுப்பதோடு விடுதி வாடகையை குறைக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பினர் கூறுகையில், கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் தங்கி உணவு சமைத்து சாப்பிடவும், ஓய்வெடுக்க வசதியாகவும் கூவாகம் கிராமத்தில் 4 மண்டபங்களை கட்டித்தர வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூத்தாண்டவர் திருவிழா சமயத்தின்போது ஒவ்வொரு திருநங்கையும் 1 கிராம் முதல் 1 பவுன் வரை தாலிச்சங்கிலியை கோவில் நிர்வாகத்திடம் தானமாக வழங்குகிறார்கள். ஒரு வருடத்திற்கான தாலிச்சங்கிலியை சேமித்து வைத்து, அதன் மூலம் கிடைக்கக்கூடிய தொகையை கொண்டு எங்களுக்கு எவ்வளவோ அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கலாமே? நாங்கள் இத்தனை ஆண்டுகாலம் வழங்கிய தங்கத்தின் நிலை என்ன? அரசு என்ன செய்கிறது, எங்களுக்கான அடிப்படை வசதிகளை ஏன் செய்து கொடுக்கவில்லை என்றும் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்