தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் தர்ணா
திண்டிவனம் அருகே பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டிவனம்
மாணவிக்கு பாலியல் தொல்லை
திண்டிவனம் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் சகலகலாதரன்(வயது 59) பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சகலகலாதரனை கைது செய்தனர்.
பின்னர் அவரை சிறையில் அடைப்பதற்கு முன்னதாக மருத்துவ பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், தலைமை ஆசிரியருக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் அவரது உடல்நிலை தற்போது மோசமாக உள்ளதாக கூறினர். இதையடுத்து சகலகலாதரன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டு திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முடிவு செய்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதையடுத்து கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் தலைமையில், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் போலீஸ் நிலையத்தின் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் இங்கிருந்து 500 அடி தூரத்துக்கு முன்னதாக பேரி கார்டுகள் வைத்து தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் கிராமமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தை நோக்கி வந்தனர். தடுப்புகள் அமைத்த இடத்துக்கு வந்ததும், அவர்கள் அங்கே நின்ற போலீசாரிடம் நாங்கள் உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு தான் வந்திருக்கிறோம். அனுமதி மறுத்தால் போராட்டம் நடத்துவோம். எனவே எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து எங்கள் கோரிக்கைகளை கேட்குமாறு கூறினர்.
பேச்சுவார்த்தை
இதன் பின்னர் குறிப்பிட்ட சிலரை மட்டும் போலீஸ் நிலையத்துக்குள் அழைத்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு போலீஸ் தரப்பில் தலைமை ஆசிரியரின் உடல்நிலை மோசமாக உள்ளதால் 3 நாட்கள் அவகாசமும், அவரை இடமாற்றம் செய்ய பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்வதாகவும் கூறப்பட்டது.
தர்ணா போராட்டம்
இதை ஏற்றுக்கொண்ட வி.சி.க. நிர்வாகிகள் மற்றும் மாணவியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து கிராம மக்களிடம் போலீசார் அளித்த வாக்குறுதிகளை தெரிவித்தனர். ஆனால் அவர்கள் 3 நாட்கள் கால அவகாசம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, அங்கேயே திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வி.சி.க. மாவட்ட பொருளாளர் வக்கீல் திலீபன் மற்றும் நிர்வாகிகள் கண்டன கோஷம் எழுப்பினர். பின்னர் கிராமமக்களை வி.சி.க. நிர்வாகிகள் சமாதானம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.