விக்கிரவாண்டி, பெங்களூரு ஆசிரமங்களுக்கிடையே என்ன தொடர்பு?கோர்ட்டின் அனுமதி பெற்று சோதனை நடத்த போலீசார் முடிவு
விக்கிரவாண்டி, பெங்களூரு ஆசிரமங்களுக்கிடையே என்ன தொடர்பு? என்பது குறித்து கோர்ட்டின் அனுமதி பெற்று சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்னா்.
விக்கிரவாண்டி குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபியின் நண்பர் ஆட்டோ ராஜாவுக்கு சொந்தமான ஆசிரமம் பெங்களூரு தொட்டக்குப்பி பகுதியில் உள்ளது. அந்த ஆசிரமத்தில் நேற்று முன்தினம் விழுப்புரம் தனிப்படை போலீசார் நேரில் சென்று குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் மாயமானவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அவர்கள், அங்குள்ள உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அந்த ஆசிரமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இருந்தபோதிலும் விழுப்புரம் தனிப்படை போலீசாருக்கு உதவியாக அம்மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் அந்த ஆசிரமத்திற்கு செல்லவில்லை. இதனால் அந்த ஆசிரமத்தில் விழுப்புரம் தனிப்படை போலீசாரால் முழுமையாக தீவிர சோதனை நடத்த முடியாமல்போனது. விசாரணை மட்டும் நடத்திவிட்டு கையில் கிடைத்த சில ஆவணங்களை கைப்பற்றி விழுப்புரம் வந்துள்ளனர். அங்குள்ள வருவாய்த்துறையினர் உதவி செய்திருந்தால் சோதனை நடத்தப்பட்டு இன்னும் பல தகவல்கள் கிடைத்திருக்கும். இதனால் ஏமாற்றத்துடன் தனிப்படை போலீசார் விழுப்புரம் திரும்பியுள்ளனர்.
எனவே அந்த ஆசிரமத்தில் சோதனை நடத்துவதற்காக அங்குள்ள நீதிமன்றத்தின் உதவியை நாட விழுப்புரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அம்மாநில கோர்ட்டின் அனுமதியை பெற்று அங்குள்ள வருவாய்த்துறை மூலமாக விழுப்புரம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் குண்டலப்புலியூர் ஆசிரமத்துக்கும், பெங்களூரு ஆசிரமத்துக்கும் என்ன தொடர்பு, அதன் பின்னணி என்ன? என்ற முழு விவரமும் தெரியவரும்.