சந்தனப் பேழையில் வைத்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

Update:2023-12-29 00:28 IST
Live Updates - Page 6
2023-12-28 20:14 GMT

மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் ஆண்டனி அஞ்சலி

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்கான வைக்கப்பட்டு இன்று மாலை 4.45 மணிக்கு அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் உடலுக்கு இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி அஞ்சலி செலுத்தினார்.

2023-12-28 20:05 GMT

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் உடலுக்கு இயக்குநர் வெற்றிமாறன் அஞ்சலி

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “இன்று நாம் சினிமா கதாநாயகனை மட்டுமல்ல.. நிஜ வாழ்க்கையிலும் கதாநாயகனாக இருந்த ஒரு லீடரை இழந்துவிட்டோம். இன்று சினிமாவில் இருக்கும் எல்லோரின் வாழ்விலும் ஏதோ ஒரு விதத்தில் அவர் உதவியாக இருந்திருக்கிறார். அவருடைய இழப்பு, அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. அவருடைய விருப்பத்தை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் கூறினார். 

2023-12-28 19:50 GMT

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் உடலுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் அஞ்சலி

விஜய்காந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “ஊரிலுள்ள விஜயகாந்த் மன்றத்தின் உறுப்பினராக நான் இருந்திருக்கிறேன். அவருடைய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். மக்களுக்காக அவர் நடித்த படங்கள் சிறப்பானது. நான் அவரது ரசிகன். அவரது இறப்பு பெரிய வலியை உண்டாக்கி உள்ளது. மிகப்பெரிய ஆளுமை. தமிழ் திரைஉலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும். சாதிய வர்க்கத்துக்கு எதிரா சண்டை செய்தவர் விஜயகாந்த். அவரது இறப்பு தமிழ் திரை உலகிற்கும், அரசியலுக்கும் பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார். 

2023-12-28 19:38 GMT

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் பாலா அஞ்சலி

விஜய்காந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய நடிகர் பாலா, “அவர் உன்னதமான மனிதர். என்றைக்கும் அவர் என்னோட Inspiration. என் வாழ்நாளில் முதலில் பார்த்த செலிப்ரிட்டி விஜய்காந்த் சார்தான். அவரிடம் இருந்து நிறைய விசயங்கள் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. கேப்டன் எங்கும் போகவில்லை எல்லோர் மனதிலும் குடிகொண்டுள்ளார்” என்று அவர் கூறினார்

2023-12-28 19:15 GMT

தீவுத்திடலில் பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்த ஏற்பாடு

நேற்றிரவு 7 மணியளவில் தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடலை கொண்டு வர அரசு ஒப்புதல் அளித்தது. உடனடியாக விஜயகாந்த் உடலை வைப்பதற்கு மேடை அமைக்கும் பணிகளும், தொண்டர்கள், ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்துவதற்கு தடுப்பு வேலி அமைப்பதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் பிரேமானந்த் சின்ஹா, அஸ்ராகார்க், கிழக்கு மண்டல இணை கமிஷனர் தர்மராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் தீவுத்திடலுக்கு சென்று விஜயகாந்த் உடலை அஞ்சலிக்கு வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மன்றோ சிலைக்கு எதிரில் உள்ள தீவுத்திடல் வாசல் வழியாக பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் விஜயகாந்த் உடல் சென்னை தீவுத்திடலில் இன்று காலை முதல் மதியம் 1 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், தீவுத்திடலில் இருந்து மதியம் 1 மணியளவில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தே.மு.தி.க. அலுவலகம் வந்தடையும் என்றும், இறுதிச்சடங்கு மாலை 4.45 மணியளவில் நடைபெற்று தே.மு.தி.க. தலைமை வளாகத்தில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தே.மு.தி.க. தலைமை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அஞ்சலி செலுத்த வரும் கூட்டத்தை கருத்தில் கொண்டு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு அவருடைய உடலை ராஜாஜி அரங்கிற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2023-12-28 19:04 GMT

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்-நடிகைகளும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனால் கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தே.மு.தி.க. அலுவலகம் இருக்கும் இடம் குறுகலாக இருந்ததால், அஞ்சலி செலுத்தியவர்கள் நெரிசலில் சிக்கினார்கள். விஜயகாந்த் உடலை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் நெரிசல் ஏற்படாமல் சீராக கட்சி தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடலை கொண்டு வர நேற்று மாலையில் இருந்தே ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்