ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உண்மையில் புறக்கணிக்கப்படுவது தி.மு.க.தான் - தமிழிசை சவுந்தரராஜன்

2026-ல் தி.மு.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.;

Update:2025-01-12 18:30 IST

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 2023-ம் ஆண்டு திடீரென்று மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் அவருடைய தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவரும் உடல் நலக்குறைவால் சமீபத்தில் மரணம் அடைந்தார். எனவே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த மாதம் 5-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இடைத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தமுறை அந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. எனவே தி.மு.க.வே நேரடியாக களம் இறங்குகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இதற்கிடையே பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தன. இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் புறக்கணிப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் "நம்பிக்கையோடு போட்டி போடக்கூட தி.மு.க. தகுதியற்றது என்பதை அனைத்துக் கட்சிகளின் முடிவும் காண்பிக்கிறது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பா.ஜ.க.வும் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. அனைத்து முக்கிய கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது என்பது செய்தி. புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல... உண்மையில் புறக்கணிக்கப்படுவது தி.மு.க.தான்.

யாரும் நம்பிக்கையோடு போட்டி போடக்கூட தகுதியற்றது தி.மு.க. என்பதை அனைத்துக் கட்சிகளின் முடிவும் காண்பிக்கிறது. தி.மு.க.வின் அராஜக அரசியலால் நேர்மையாக தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இன்மையால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தும் தி.மு.க.வை 2026-ல் மக்கள் புறக்கணிப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்