நீர்மட்டம் குறையாத வெம்பக்கோட்டை அணை

கோடைக்காலம் தொடங்கியும் வெம்பக்கோட்டை அணையின் நீா்மட்டம் குறையாததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2023-04-21 19:22 GMT

தாயில்பட்டி, 

கோடைக்காலம் தொடங்கியும் வெம்பக்கோட்டை அணையின் நீா்மட்டம் குறையாததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வெம்பக்கோட்டை அணை

சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணை 24 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தினமும் சிவகாசி மாநகராட்சிக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்மாய்களிலும், கிணறுகளிலும், போதிய தண்ணீர் இருப்பதால் அணையின் தண்ணீரை பயன்படுத்தவில்லை. மேலும் சாத்தூர் அருகே உள்ள நென்மேனி கண்மாயில் இந்த மாதத்தில் விவசாயத்திற்கு அணையில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படும். ஆனால் ஓரளவு தண்ணீர் இருப்பதால் வெம்பக்கோட்டை அணையின் தண்ணீரை எதிர்பாராமல் விவசாயம் செய்து வருகின்றனர்.

நீர்மட்டம் குறையவில்லை

கடந்த நவம்பர் மாதம் முதல் மழை இப்பகுதியில் பெய்யவில்லை. மேலும் அணைக்கு நீர்வரத்தும் இல்லை. இருப்பினும் நீர்மட்டம் கடந்த 4 மாதங்களாக 14 அடி உயரம் இருந்து வருகிறது. பெரும்பாலும் மார்ச் மாதத்தில் வெம்பக்கோட்டை அணை முழுவதும் வறண்டு காணப்படும்.

ஆனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அணையில் நீர் நிரம்பி உள்ளது. நீர் மட்டம் குறையாததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. தற்போது கோடை விடுமுறையாக இருப்பதால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் வெம்பக்கோட்டை அணையை பார்வையிட்டு வருகின்றனர். அணையில் சிறுவர் பூங்கா இல்லாததால் பொழுது போக்க வழி இல்லாமல் சிரமப்படுகின்றனர். நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் வெம்பக்கோட்டை அணையில் பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்