பாதுகாப்பற்ற நிலையில் ஆற்றின் கரையோரத்தில் செல்லும் வாகனங்கள்

பாதுகாப்பற்ற நிலையில் ஆற்றின் கரையோரத்தில் செல்லும் வாகனங்கள்

Update: 2022-12-23 18:45 GMT

திருவாரூரில் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் ஆற்றின் கரையோரத்தில் வாகனங்கள் செல்கிறது. விபத்தினை தடுத்திட ஆற்றின் கரையில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆற்றிற்குள் செல்லும் நிலை

திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஒரு புறம் ஆற்றின் கரை பகுதியாக இருந்து வருகிறது. இதனால் விபத்துக்களை தடுக்கும் வகையில் குறுகிய இடங்களில் ஆற்றின் கரையில் இரும்பு தகடுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தாசில்தார் அலுவலகம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ஒரு புறம் ஒடம்போக்கியாற்றின் கரையையொட்டிய பகுதியாக இருந்து வருகிறது.

இந்த கரை பகுதி எந்தவித இரும்பு தடுப்புகள் எதுவுமின்றி உள்ளது. ஆற்றின் கரை பகுதியில் எந்தவித சிமெண்டு தடுப்பு சுவர் கட்டப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கர்ணம் தப்பினால் மரணம் என்பது போல் ஆற்றின் கரை பலவீனமடைந்துள்ளதால் சற்று தடுமாறினால் ஆற்றிற்குள் தான் செல்ல வேண்டிய ஆபத்தான நிலை இருந்து வருகிறது.

இரும்பு தடுப்புகள்

தற்போது இந்த கலெக்டர் அலுவலகம் முதல் தாசில்தார் அலுவலகம் வரையிலான சாலை என்பது மிகவும் சேதமடைந்து குண்டு, குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் ஆற்றின் கரை பகுதி பல இடங்களில் பலவீனப்பட்டுள்ளதால், எந்த நேரத்தில் பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள் ஆற்றில் இறங்கும் ஆபத்தான நிலை நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திருவாரூர் பகுதி ஒடம்போக்கியாற்றின் கரையில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் கூறுகையில்,

வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு போன்ற பகுதிகளுக்கு திருவாரூர் வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் எந்த நேரமும் போக்குவரத்து மிகுந்த சாலையாக இருந்து வருகிறது. திருவாரூர் நகரின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்பது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.

விபத்தை தடுக்கும் வகையில்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் தாசில்தார் அலுவலகம் வரையிலான சாலை என்பது ஒடம்போக்கியாற்றின் கரை பகுதி வழியாக செல்கிறது.

ஆனால் ஒடம்போக்கியாற்றின் கரை பகுதியில் எந்தவித தடுப்புகள் இன்றி உள்ளது என்பது வேதனைக்குரியது. இதனால் சேதமடைந்த சாலையில் செல்லும் பஸ் போன்ற வாகனங்கள் விபத்துள்ளானால், அந்த வாகனம் என்பது அடுத்த நிமிடமே ஆற்றிற்குள் இறங்கி ஆபத்தினை விளைவிக்கும் நிலை இருந்து வருகிறது.

இரவு நேரங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவே விபத்தினை தடுக்கும் வகையில் ஒடம்போக்கியாற்றின் கரையில் சிமெண்டு தடுப்பு சுவர் கட்டுவதுடன், எச்சரிக்கை இரும்பு தகடு தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்