பழுதுநீக்கும் பணிக்காக சென்னை வந்துள்ள அமெரிக்க கடற்படை கப்பல்

சார்லஸ் ட்ரூ கப்பல் ஒரே சமயத்தில் 41 ஆயிரம் டன் எடை வரையிலான பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

Update: 2022-08-07 14:11 GMT

சென்னை,

அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 'சார்லஸ் ட்ரூ' என்ற ராணுவ தளவாட கப்பல் ஒன்று முதல் முறையாக பழுதுநீக்கும் பணிக்காக சென்னை வந்துள்ளது. இந்திய பசிபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பல், 689 அடி நீளம் கொண்டது. அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு தேவையான உணவு, எரிபொருள், நீர், உதிரி பாகங்கள் உள்ளிட்ட தளவாடங்களை கொண்டு செல்வதற்கு இந்த கப்பல் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சார்லஸ் ட்ரூ கப்பல் ஒரே சமயத்தில் 41 ஆயிரம் டன் எடை வரையிலான பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு மட்டுமல்லாமல், இந்திய பசிபிக் பகுதியில் உள்ள நட்பு நாடுகளின் கப்பல்களுக்கும் தேவையான தளவாட உதவிகள் இந்த கப்பல் மூலமாக செய்யப்பட்டு வருகிறது.

இந்த கப்பலில் தற்போது பழுது ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையை அருகே காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் எல்&டி துறைமுகத்திற்கு பழுது நீக்கும் பணிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கப்பலை இன்று மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமார் ஐ.ஏ.எஸ். இன்று வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து கப்பலில் பழுது நீக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் 10 நாட்களில் பழுது நீக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, கப்பல் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்