பாமக நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி உட்பட இருவர் கைது

செங்கல்பட்டில் பாமக நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி உட்பட இருவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

Update: 2023-07-11 11:57 GMT

செங்கல்பட்டு,

செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க. நகர செயலாளரான இவர் செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த இவரை, நேற்றுமுன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நாகராஜை சரமாரியாக வெட்டினர். இதில் நாகராஜ், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த போலீசார், 2 பேரை கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், இதில் முக்கிய குற்றவாளியான சூர்யா மற்றும் விஜயகுமார் ஆகிய 2 பேர் காஞ்சிபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கரவாகனத்தில் விரட்டிச்சென்று போலீசார் அவர்களை கைதுசெய்துள்ளனர்.

போலீசார் விரட்டிச்சென்றபோது, இருசக்கரவாகனத்தில் இருந்து இருவரும் தவறி விழுந்தனர். இதில் இருவருக்கும் கால்முறிவு ஏற்பட்டதால், இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை வழக்கில் இதுவரை 4 பேரை கைதுசெய்துள்ள போலீசார், எஞ்சியுள்ள இருவரையும் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்