"யாரையும் பழிவாங்க வேண்டாம்.." மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் சிக்கின - அடுத்தடுத்து பரபரப்பு

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளன.

Update: 2024-05-05 06:21 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார்.

கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஜெயக்குமாரின் மூத்த மகன் கருத்தையா ஜெப்ரின் காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடித்து தரும்படி நேற்று முன்தினம் உவரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்கை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

நேற்று காலையில் அவரது வீட்டின் பின்னால் உள்ள தென்னந்தோப்பில் உடல் எரிந்த நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த தோட்டத்தில் வேலை செய்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசாரும் அங்கு வந்தனர்.

அப்போது, பிணமாக கிடந்தவர் ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். பிணமாக கிடந்த ஜெயக்குமாரின் கை, கால்கள் பலகையில் மின் ஒயரால் கட்டப்பட்டும், உடல் கருகிய நிலையிலும் இருந்தது. எனவே, அவரை யாரேனும் கை-கால்களை கட்டி கொலை செய்து இங்கு கொண்டு வந்து எரித்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில் ஜெயக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கரைகத்துப்புதூரில் உள்ள ஜெயக்குமாரின் குடும்ப கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் ஜெயக்குமாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதியதாக மேலும் இரண்டு கடிதங்கள் வெளியாகி உள்ளது. அதில் தனக்கு 14 நபர்கள் லட்சக்கணக்கான பணம் பாக்கி வைத்துள்ளதாகவும், அதற்காக பழி வாங்க வேண்டாம் என்றும் ஏப்ரல் 27-ந்தேதி தன் மருமகன் ஜெயபாலுக்கு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பான அந்த கடிதத்தில், மகள் கத்ரீன் திருமணத்தை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி. குடும்பத்தினர் மீது தனது அன்பு எப்போதும் உண்டு. சட்டம் தன் கடமையை செய்யும், தனது பிரச்சினையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம் என்றும் அதில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் யார் யாரிடம் இருந்து எவ்வளவு பணம் வசூலிக்க வேண்டும் என்றும், தனக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான பணம் தொடர்பாக 14 பேர் கொண்ட பட்டியலையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தான் திருப்பி அளிக்க வேண்டிய பண விவரங்களையும் ஜெயக்குமார் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியனிடம் ரூ. 5 லட்சம் கொடுத்துவிட்டு காசோலையை திரும்ப பெற வேண்டும் என்றும் இடிந்தகரையை சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சம் திரும்ப கொடுக்க வேண்டும் என்பதையும் அதில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்து ஆவணங்கள் குறித்தும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்