அதிக எடையுடன் நெல் மூட்டைகள் ஏற்றிய லாரியை விவசாயிகள் சிறைபிடிப்பு

செய்யாறு அருகே அதிக எடையுடன் நெல் மூட்டைகள் ஏற்றிய லாரியை விவசாயிகள் சிறைபிடித்தனர்.

Update: 2023-08-05 17:16 GMT

செய்யாறு

செய்யாறு அருகே அதிக எடையுடன் நெல் மூட்டைகள் ஏற்றிய லாரியை விவசாயிகள் சிறைபிடித்தனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம்

வெம்பாக்கம் தாலுகா பொக்கசமுத்திரம், நாட்டேரி, தென்னம்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் சொர்ணவாரி பட்டத்தில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.

இக்கிராமங்களில் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.

சொர்ணவாரி பட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரையில் திறக்காத காரணத்தால், அறுவடை செய்த நெல்லினை விவசாயிகள் முகவர் மூலம் ஆரணியை சேர்ந்த தனியார் வியாபாரிக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை பொக்கசமுத்திரம் கிராமத்தில் விவசாயிகளிடம் வாங்கிய நெல் மூட்டைகளை லாரியில் கொண்டு செல்ல முயன்றனர்.

லாரி சிறைபிடிப்பு

அப்போது விவசாயிகள் சிலர், சில நெல் மூட்டைகள் அளவுக்கு அதிகமாக இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தனர். அதன் காரணமாக நெல் மூட்டைகளை மீண்டும் எடை போட வேண்டும் என ஆரணி வியாபாரியிடம் வற்புறுத்தியுள்ளனர்.

அதன்பேரில் லாரியில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகளை இறக்கி மீண்டும் எடை போடும் எந்திரத்தில் எடை போட்டுள்ளனர். அப்போது ஒரு மூட்டைக்கு 75 கிலோ முதல் 78 கிலோ இருக்க வேண்டிய நிலையில், 90 கிலோவுக்கு மேல் எடை எந்திரம் காண்பித்தது. இதனால் எடை போடும் ஊழியர்களிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நெல் மூட்டைகளை ஏற்றிய லாரியை சிறை பிடித்தனர்.

கூடுதல் எடை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பிரம்மதேசம் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நெல் எடை போடும் எந்திரம் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து மாற்று எடை எந்திரம் கொண்டு வந்து சில மூட்டைகளை எடை போட்டு பார்த்தனர்.

அப்போதும் அனைத்து நெல் மூட்டைகளும் கூடுதல் எடை கொண்டவையாக இருந்தது. இதையடுத்து கூடுதல் எடை கொண்ட நெல்லுக்குண்டான உரிய விலையை கொடுப்பதாக நெல் வியாபாரி விநாயகமூர்த்தி உறுதி அளித்தார்.

அதன்பேரில், விவசாயிகள் வாக்குவாதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்