மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; விக்ரம் ரசிகர் மன்ற செயலாளர் பலி
வில்லுக்குறி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நடிகர் விக்ரம் ரசிகர் மன்ற குமரி மாவட்ட செயலாளர் பரிதாபமாக பலியானார்.;
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் வடக்குதெருவை சேர்ந்தவர் பாலு (வயது 46). இவருக்கு துர்காதேவி என்ற மனைவி உள்ளார்.
பாலு, நடிகர் விக்ரம் ரசிகர் மன்ற குமரி மாவட்ட செயலாளராகவும், பேக்கரி கடைகளுக்கு மிட்டாய்கள் போடும் தொழிலும் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பாலு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வில்லுக்குறி அருகே தோட்டியோடு பகுதியில் சென்றபோது அவருக்கு பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட பாலு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலுவின் மனைவி துர்காதேவி இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.