யானை பாகன்களுக்கு பயிற்சி

டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் யானை பாகன்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-09-23 21:45 GMT


பொள்ளாச்சி


டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் யானை பாகன்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


பாகன்களுக்கு பயிற்சி


ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்கவ தேஜா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி அட்டகட்டி வன உயரின பயிற்சி மையம் சார்பில் பொள்ளாச்சி அருகே உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் பாகன்கள் மற்றும் பணியாளர்களுக்கு முதல் முறையாக புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.


புலிகள் காப்பக உதவி வனக் கால்நடை டாக்டர் விஜயராகவன் கும்கி யானைகளை கொண்டு காட்டு யானைகளை கையாளுதல் மற்றும் அப்போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார். தொடர்ந்து புகைபிடித்தல், மது அருந்துதல், புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து டாக்டர் சரண்யா விளக்கி பேசினார்.


இதையடுத்து கோவையைச் செய்ய தன்னார்வலர் சையது அமீர் பாம்புகளின் விஷத்தன்மை குறித்தும், வனவர் சோழ மன்னன், வனக்காப்பாளர் மாயத்துரை ஆகியோர் சுற்றுலா பயணிகளிடம் முகாம் பணியாளர்கள் அணுகுமுறை குறித்தும் சிறப்பு வகுப்புகள் எடுத்தனர்.


சான்றிதழ்


கோழிகமுத்தி முகாமில் மூத்த அனுபவமுள்ள பாகன்கள், தற்காலிக பணியாளர்களுக்கு காட்டு யானைகள் பிடிக்கப்படும் போது மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து நேரடியாக செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும் பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கும்கி ஆபரேசன் பணியில் சிறப்பாக செயல்பட்ட 19 பாகன்கள், காவடி பணியாளர்களுக்கு துணை இயக்குனர் பார்கவ தேஜா சிறப்பு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


விழாவில் உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் சுந்தரவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்