ஆனைமலை அருகே பரிதாபம்: கோவில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 2 பேர் பலி

ஆனைமலை அருகே கோவில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 2 ேபர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-08-31 16:23 GMT

ஆனைமலை

ஆனைமலை அருகே கோவில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 2 ேபர் பரிதாபமாக இறந்தனர்.

கோவில் சுவர் இடிந்தது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே எட்டித்துறை பகுதியில் புத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தநிலையில் அந்தப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அதேப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான நடராஜ் (வயது 50), முருகன் என்பவரின் மகன் ஹரி (13), பிரபு (35) நித்திஷ் (11) மற்றும் நிர்மல் (14) ஆகியோர் கோவில் அருகே மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கி நின்றனர்.

அப்போது திடீரென கோவிலின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் கோவில் அருகே நின்றுகொண்டு இருந்த 5 பேரும் சிக்கினார்கள்.

சிறுவன் உள்பட 2 பேர் பலி

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் சுவரின் இடிப்பாடுக்குள் சிக்கிய 5 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் அவர்கள் ஆனைமலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஹரி மற்றும் நடராஜ் ஆகியோர் இறந்தது தெரியவந்தது. மற்ற 3 பேரும் படுகாயத்துடன் உயிர் தப்பினார்கள். அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இறந்த ஹரி, நடராஜ் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்