சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருந்து விமானநிலையம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம்
கோவை-அவினாசி சாலையின் குறுக்கே இருந்த தடுப்புகளை அகற்றி சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருந்து விமான நிலையம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை-அவினாசி சாலையின் குறுக்கே இருந்த தடுப்புகளை அகற்றி சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருந்து விமான நிலையம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேம்பாலம் கட்டும் பணி
கோவை மாநகரில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து உள்ள சாலையாக கோவை-அவினாசி ரோடு விளங்குகிறது. இந்த சாலையில் கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,621 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்திற்காக இதுவரை 280-க்கும் மேற்பட்ட கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு உள்ளன.
மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அவினாசி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதன்காரணமாக வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக விமானநிலையம் முதல் லட்சுமி மில் சிக்னல் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
கோவை விமானநிலையத்தில் இருந்து பீளமேடு நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் ரோடு வழியாக சிங்காநல்லூர் மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியும். ஆனால் சிங்காநல்லூரில் இருந்து வரும் வாகனங்கள் விமானநிலையம், கொடிசியா செல்ல வேண்டும் என்றால் ஹோப்காலேஜ் சிக்னல் சென்று அங்கிருந்துதான் விமான நிலையம். கொடிசியா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியும். காமராஜர் ரோட்டில் இருந்து நேரடியாக விமான நிலையம் செல்ல முடியாது. இதன்காரணமாக ஹோப் காலேஜ் சிக்னல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதனை தவிர்க்கும் விதமாக காமராஜர் சாலையில் இருந்து விமான நிலையம், கொடிசியா உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்கள் நேரிடையாக செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-
இரும்பு தடுப்புகள்
சிங்காநல்லூர் காமராஜர் ரோடும், அவினாசி ரோடும் சந்திக்கும் இடத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இதன்காரணமாக வாகனங்கள் ஹோப்காலேஜ் சிக்னலை சுற்றிக்கொண்டு சென்றன. இந்த நிலையில் சோதனை ஓட்டமாக காமராஜர் சாலையில் இருந்து கொடிசியா, விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது. இதற்காக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளது.
ஆனால் அவினாசி ரோட்டில் இந்த பகுதியில் அதிவேகமாக வாகனங்கள் வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் அவினாசி சாலை, காமராஜர் சாலை சந்திக்கும் பகுதியில் சிக்னல் அல்லது இரும்பு தடுப்பான்கள் மூலம் வாகனங்களின் வேகத்தை குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.