வாரஇறுதி விடுமுறையைக் கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வாரஇறுதி விடுமுறை நாளான இன்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

Update: 2023-01-08 11:41 GMT

திண்டுக்கல்,

'மலைகளின் இளவரசியான' என்று அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. கொடைக்கானலின் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்கள்.

குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். அந்த வகையில் வாரஇறுதி விடுமுறை நாளான இன்று கொடைக்கானலில் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

கொடைக்கானலின் குளுமையான காலநிலையை அனுபவித்தபடியே நகரில் உள்ள பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி, குணா குகை, பில்லர் ராக்ஸ், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு ரசித்தனர். அங்குள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பங்களோடு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் இன்று கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்கள் களைகட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்