வியாபாரத்தை உலக அளவில் கொண்டு செல்ல: கரூரில் சர்வதேச முருங்கை கண்காட்சி 4-ந்தேதி தொடக்கம்
வியாபாரத்தை உலக அளவில் கொண்டு செல்ல கரூரில் சர்வதேச முருங்கை கண்காட்சி வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது என ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
கரூரில் சர்வதேச அளவிலான முருங்கை கண்காட்சி வருகிற 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் உள்ள முருங்கையை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் வருகிற 4, 5, 6-ந் தேதிகளில் சர்வதேச முருங்கை கண்காட்சி நடைபெற உள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ரூ.80 கோடி அளவிலான முருங்கை வியாபாரத்தை ரூ.120 கோடி அளவிற்கு கொண்டு செல்லும் வகையில் திட்டமிட்டு இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. குறிப்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் ஒருங்கிணைந்து மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும்.
50 ஆயிரம் கோடி ஏற்றுமதி
கரூர் மாவட்டத்தில் 2030-ம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் தொழில்கள் சார்பில் ரூ.25 ஆயிரம் கோடியும், தொழில்சாராத விவசாயத்தில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடியும் ஏற்றுமதி செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.முதல்-அமைச்சர் கரூர் மாவட்டத்தை முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்துள்ளது பெருமைப்படக்கூடிய விஷயமாகும். முருங்கையை காயாக ஏற்றுமதி செய்யாமல் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக ஏற்றுமதி செய்ய முன்வர வேண்டும்.20 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது இந்த தொழில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சர்வதேச கண்காட்சியை பெரும் திருவிழாவாக மாற்றி உலகத்திற்கு முருங்கை வழங்கும் மையமாக கரூர் மாவட்டம் உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.