உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலபடுத்தும் வகையில்மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி

உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலபடுத்தும் வகையில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி நாளையும், 17-ந் தேதியும் நடக்கிறது.

Update: 2023-03-12 18:08 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னோடி விவசாயிகள் பல்வேறு சிறப்பு பண்புகளை கொண்ட பயிர் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்கள். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், வறட்சியை தாங்கி வளரும் தன்மை மற்றும் மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது. மேற்கூறிய பாரம்பரியமிக்க உள்ளூர் பயிர் ரகங்கள் தாவர மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான விரும்பத்தக்க புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. நமது தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இதற்காக சிறப்பு கண்காட்சி நடத்திட அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளூர் பயிர் ரகங்களை கண்டறிந்து பகுதிக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுகுறித்த கண்காட்சிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியிலும், வருகிற 17-ந் தேதி வாலிகண்டபுரத்தில் உள்ள ஒரு தனியார் வேளாண் அறிவியல் மையத்திலும் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரிய உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்துதல், விவசாயிகள்- விஞ்ஞானிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு திருவிழா, விவசாயிகள் பயிற்சி, மரபியல் பன்முகத்தன்மை குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப உரை போன்ற பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன. எனவே விவசாய பெருமக்கள் அனைவரும் இக்கண்காட்சிகளில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்