ஜெகதேவியில் நாளை நடக்கிறது: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா-அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பதாக ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா ஜெகதேவியியல் நாளை நடக்கிறது. இதில் அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பதாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சரயு தெரிவித்தார்.

Update: 2023-09-13 18:45 GMT

ஜெகதேவியில் விழா

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்ட விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, ஜெகதேவி ஊராட்சியில், தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில், மொத்தம் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம் கார்டு, தகவல் கையேடு, முதல்-அமைச்சரின் கடிதம் ஆகியவற்றை வழங்க உள்ளார்.

விழா தொடங்கும் முன்னர் காலை 9 மணி முதல் 10 மணி வரை அரசு இசைப்பள்ளி சார்பில் மங்கள இசை, பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழா நடைபெறும் அரங்கு மற்றும் பயனாளிகளுக்கான இருக்கைகள், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கவும், குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்ய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

ஒத்துழைப்பு தர வேண்டும்

சமூக பாதுகாப்புத்திட்டத்தின் சார்பில் விழா அரங்கில் வருவாய்த்துறை, வங்கி அலுவலர்கள், மாவட்ட மின்னாளுமை மேலாளர் ஆகியோரை கொண்டு உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. பயனாளிகளை அழைத்து வர வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் தேவையான பஸ் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் எல்.இ.டி. திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை சார்பாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக தொடங்கும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சரயு கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, தனித்துனை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர் செல்வம், முன்னோடி வங்கி மேலாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்