நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்து வரும் திருவாரூர் கடைவீதி

நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்து வரும் திருவாரூர் கடைவீதி

Update: 2023-08-20 18:45 GMT

திருவாரூர் கடைவீதி நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்து வருகிறது. எனவே ஆக்கிரப்புகளை அகற்றி இருசக்கர வாகனம் நிறுத்த இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் கடைவீதி

திருவாரூர் மாவட்டத்தின் தலைநகராக இருந்த போதிலும் நகரில் தேரோடும் 4 வீதிகளை தவிர அனைத்து சாலைகளும் மிக குறுகலாக இருந்து வருகின்றன. இதில் காய்கறி, மளிகை, துணிக்கடை, நகை கடை போன்ற பெரும்பாலான கடைகள் அனைத்தும் கடைவீதியில் உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கடைவீதி எந்த நேரத்திலும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

ஒரு சில கடை தங்களது எல்லையை தாண்டி விரிவுப்படுத்தல், நடைபாதை கடைகள் போன்ற பல்வேறு காரணங்களால் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. கடைவீதி உள்ளே எந்த நேரமும் கனரக வாகனம் செல்வதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால் வாகன ஒட்டிகள், நடந்து செல்பவர்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். . வாகன நிறுத்துவதற்கு இடவசதி இல்லாத கடைவீதியாக இருந்து வருகிறது.

இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும்

எனவே கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தினை சீரமைக்க வேண்டும். இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தின் தலைநகராக திருவாரூர் உள்ள நிலையில், அதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். நகரின் முக்கிய பகுதியாக கடைவீதி உள்ளது. இந்த கடைவீதி முறையாக ஒழுங்குப்படுத்தப்படாமல், ஆக்கிரப்புகளால் சாலைகள் குறுகி வாகனங்கள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

எல்லை கோடு அமைப்பு

இந்த கடைவீதி சாலையில் போக்குவரத்து துறையால் சாலைகளின் இருப்புறமும் கயிறு மூலம் எல்லை கோடு அமைக்கப்பட்டது. இவை தற்போது காணாமல் போகும் நிலையில் கடைகள், சாலையோர கடைகள் அமைந்துள்ளன. குறிப்பாக வாகன நிறுத்துமிடம் இல்லாத கடைவீதியாக இருந்து வருவது வேதனைக்குரியது. கனரக வாகனங்கள் கடைவீதிக்குள் செல்வதற்கு ஒரு கால நிர்ணயம் செய்ய வேண்டும்.

போக்குவரத்தினை சீரமைத்திட புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய போலீசார் நியமிக்கப்படாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை இணைந்து ஆக்கிரப்புகளை நிரந்தரமாக அகற்றிட வேண்டும். போதிய போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்தினை சீரமைத்திட வேண்டும். இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்