திருப்பூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் பணியிடை நீக்கம்

திருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-06-17 03:28 GMT

பல்லடம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேகாம்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 200-க்கு மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியராக பழனிச்சாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் கணித ஆசிரியராக செந்தாமரை கண்ணன்(வயது57) என்பவர் உள்ளார்.

கடந்த 13-ம் தேதி முதல் பள்ளி திறக்கப்பட்டு வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கணித ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பல்லடம் போலீசார் பள்ளிக்குச் சென்று மாணவியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பள்ளி ஆசிரியர் செந்தாமரைக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்