மாசிப்பெருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்

மாசிப்பெருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் முருகன், வள்ளி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-03-06 12:13 GMT

திருக்கல்யாண நிகழ்ச்சி

முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திருத்தணி முருகன் கோவில் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் மாசிப்பெருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உற்சவ முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும், ஒரு வாகனத்தில் காலை, மாலை என, இரு வேளைகளில் மாட வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்நிலையில் 9-வது நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

பக்தர்கள் தரிசனம்

இதில், இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். முருகப்பெருமான் இரண்டாவதாக வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்டு கோவிலுக்குள் செல்லும் போது தெய்வயானை அம்மையார் கோவிலின் பிரதான வாயில் உள்ளே அனுமதிக்காமல் மறுப்பது, பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை அம்மையாரை சமாதானம் செய்து கோவிலுக்குள் அழைத்து செல்லும் வைபோக வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

விழாவையொட்டி மூலவர் முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து தங்கவேலுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் விஜயா மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்