நெய்வேலி வன்முறையில் ஈடுபட்டவர்கள் பா.ம.க.வினர் அல்ல - அன்புமணி ராமதாஸ் பேட்டி

நெய்வேலி வன்முறையில் ஈடுபட்டவர்கள் பா.ம.க.வினர் அல்ல என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-08-04 08:27 GMT

நெல்லை,

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 28-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது ஆர்ப்பாட்டத்தின் போது அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து கட்சி நிர்வாகிகள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து பெரும்பாலானோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி அவர்களில் 20 பேரை பாளை மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர். தகவல் அறிந்து அவர்களை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலமாக இன்று காலை அன்புமணி ராமதாஸ் வந்து சேர்ந்தார். அங்கிருந்து காரில் நெல்லை புறப்பட்டு வந்த அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கட்சியினரை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

என்.எல்.சி.க்கு எதிரான போராட்டத்தில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

நெய்வேலி வன்முறையில் ஈடுபட்டவர்கள் பா.ம.க.வினர் அல்ல. எங்கள் கூட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததன் காரணமாகத்தான் அசம்பாவிதம் நடந்துள்ளது. சிறையில் இருப்பவர்கள் யாரும் எந்த தவறும் செய்யாதவர்கள். எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி கொடுக்கவே ஆர்ப்பாட்டத்தில் வன்முறை செய்துள்ளனர்.

தூத்துக்குடியை போல் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து என்.எல்.சி. செயல்பட்டு கொள்ளட்டும். நெய்வேலியில் இருந்து என்.எல்.சி. வெளியேற வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்.

புதிதாக மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டால் காவிரி டெல்டா மற்றும் வேளாண் மண்டலங்கள் அனைத்தும் பாதிக்கப்படும். நாங்கள் ஒருபோதும் இந்த மண்ணையும், விவசாயத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தொடர்ந்து என்.எல்.சி. பிரச்சினைக்காக போராட்டம் நடத்துவோம். சுமார் 300 கிராமங்களின் கிராம சபை கூட்டத்திலும் என்.எல்.சி. நெய்வேலிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்