தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: விசாரணை ஆணைய அறிக்கையின்படி எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கையா?-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணைய அறிக்கையின்படி எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உள்துறை தான் முடிவு செய்யும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Update: 2022-10-21 18:19 GMT

அமைச்சர் பேட்டி

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் யார்? யார்? மீது குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளதோ? அவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆணையத்தின் அறிக்கையை அரசியலுக்காக பயன்படுத்துவது அல்ல. ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆணையம். அந்த ஆணையத்தின் குற்றச்சாட்டுகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு முதல்-அமைச்சராக இருந்தார். எல்லா கட்டுப்பாடுகளும் யாருடைய கையில் இருந்தது என ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரே ஒரு அமைச்சரை தவிர வேறு யாருக்கும் அதில் ரோல் கிடையாது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டமன்றத்தில் எங்களது தோழமை கட்சி உறுப்பினர்கள் பேசியிருக்கின்றனர். இது குறித்து துறைரீதியாக அரசு நடவடிக்கை எடுக்கும். டி.டி.வி. தினகரன் இந்த ஆணைய அறிக்கையை வரவேற்க மாட்டார். ஏனென்றால் அவர்கள் தான் மருத்துவமனையில் 10 அறைகளை எடுத்து தங்கி இருந்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்துள்ள அறிக்கையின் படி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை அல்லது வழக்குப்பதிவு செய்யப்படுமா? என்பது குறித்து உள்துறை தான் முடிவு செய்யும்.

ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருமயம் சட்டமன்ற தொகுதியில் முக்கியமாக நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார். கூட்டத்தில் கலெக்டர் கவிதாராமு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்