தமிழக கவர்னரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்பதை காட்டிக்கொள்ளும் முயற்சி; தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி

தமிழக கவர்னரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்பதை காட்டிக்கொள்ளும் முயற்சி என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

Update: 2022-11-25 19:11 GMT

தாமரைக்குளம்:

அரியலூரில் நேற்று தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக கவர்னரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது, எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்கான முயற்சி ஆகும். தற்போது அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிவிட்டு, பா.ஜ.க. தாங்களே எதிர்க்கட்சி என காட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் அ.தி.மு.க. தலைமைக்கு எதிரான விமர்சனங்கள் அந்த கட்சியிலேயே எழுந்தன. அதை சரி செய்வதற்கு, ஈடு செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி, இந்த சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறார் என்று நான் கருதுகிறேன். மேலும் அரசின் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகளை கூற வேண்டும் என்று ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆதாரம் இருந்தால் அவர்கள் சட்டப்படி முன் வைக்கட்டும். நம்முடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்.மின் வினியோகம் பெற்று அனைவரும் பயன்பெற வேண்டும், தவறான முறையில் மின் வினியோகம் இருக்கக் கூடாது என்பதற்காகவும், கண்காணிக்கப்பட கூடிய வகையில் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கத்திலும் மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு செய்திருக்கிறது. அரசின் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்