அமைச்சர், கலெக்டர் பயணித்த வாகனம் சேற்றில் சிக்கியதால் பரபரப்பு
ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் அமைச்சர், கலெக்டர் பயணித்த வாகனம் சேற்றில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் அமைச்சர், கலெக்டர் பயணித்த வாகனம் சேற்றில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு மருத்துவக்கல்லூரி
நீலகிரி மாவட்டம் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் ரூ.447.32 கோடி மதிப்பில் 40 ஏக்கரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 150 மாணவர்களுடன் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியின் கட்டுமான பணிகள் நிறைவடையாததால், விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாதத்தில் 2 நாட்கள் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று அமைச்சரும், கலெக்டரும் மருத்துவக்கல்லூரிக்கு ஆய்வு செய்ய சென்றனர். அங்கு மெயின் ரோட்டில் இருந்து கல்லூரிக்கு செல்லும் சாலை மழை காரணமாக சேறும் சகதியுமாக இருந்தது. இதனால் அவர்களது கார்கள் கடும் சிரமத்துடன் கல்லூரி வளாகத்திற்குள் வந்தன. இதைத்தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய அமைச்சர், கலெக்டர் இருவரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.
வாகனம் சேற்றில் சிக்கியது
அதன்பின்னர் 2-வது பிளாக்கில் நடைபெற்று வரும் மாணவர் விடுதி பணிகளை பார்வையிட்டனர். ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் மற்றும் கலெக்டரை அவர்களது காரின் அருகே விடுவதற்காக ஒரு வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். அந்த வாகனம் சாலையின் வளைவில் திரும்பும் போது, திடீரென நிலை தடுமாறி நின்றது. அப்போது டிரைவர் உடனடியாக வாகனத்தை பின்நோக்கி இயக்கினார். ஆனால், அந்த வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் 15 அடி பள்ளத்தில் கவிழும் அபாயம் இருந்தது.
அப்போது வாகனத்தின் இடதுபுற சக்கரம் சேற்றில் சிக்கி வழுக்கியது. இதனை சுதாரித்து கொண்ட டிரைவர் உடனே பிரேக் பிடித்ததால் பள்ளத்தில் கவிழாமல் வாகனம் நின்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் 2 பேரும் தப்பினர். இதையடுத்து உடனடியாக இருவரையும் வாகனத்தில் இருந்து பத்திரமாக கீழே இறக்கிய அதிகாரிகள், பின்னர் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.