மண் அரிப்பால் தென்பெண்ணையாற்று மேம்பாலம் சேதமடையும் அபாயம்

விழுப்புரம் அருகே பிடாகத்தில் மண் அரிப்பால் தென்பெண்ணையாற்று மேம்பாலம் சேதமடையும் நிலை உள்ளதால் இதை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2022-09-20 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே பிடாகத்தில் மண் அரிப்பால் தென்பெண்ணையாற்று மேம்பாலம் சேதமடையும் நிலை உள்ளதால் இதை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை

சென்னை- திருச்சி இடையே உள்ள தேசிய நெடுங்சாலையானது போக்குவரத்துக்கு மிகவும் சுலபமாக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வர மிகவும் வசதியாக உள்ளது. தென்தமிழகத்தில் இருந்து சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கு சென்று வரவும் இச்சாலை பேருதவியாக அமைந்துள்ளது.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியில் ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய மேம்பாலமாக உள்ள இந்த பாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வருவதால் இந்த மேம்பாலத்தில் எந்நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த பாலத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.

மண் அரிப்பு

இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக எல்லீஸ்சத்திரம், தளவானூர், பிடாகம் உள்ளிட்ட பகுதிகளில் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் பிடாகம் தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் அங்குள்ள மேம்பாலத்தின் 5-வது கான்கிரீட் தூண் அருகே மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்தும் வருகிறது. இது தொடர்ந்து நீடித்தால் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதோடு பாலமும் சேதமடையும் நிலை ஏற்படலாம்.

சீரமைக்கப்படுமா?

எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை கட்டுமானத்துறை அதிகாரிகள் பாலத்தின் அடிப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் மணல், கற்களை கொட்டி சமப்படுத்துவதோடு பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்