போலீஸ் கூண்டில் ஏறி ரகளை செய்த தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்தது

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே போலீஸ் கூண்டில் ஏறி ரகளை செய்த வாலிபர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-11-22 16:36 GMT

போலீஸ் கூண்டில் ஏறி ரகளை

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இதையொட்டி போலீஸ் கூண்டு இருக்கிறது. நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில், அந்த போலீஸ் கூண்டின் மீது 20 வயது வாலிபர் ஏறி நின்றார்.

தன்னை சிலர் தாக்கியதாக கூறி அவர் சத்தம் போட்டு கொண்டிருந்தார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அந்த வாலிபரை இறங்கி வரும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர் இறங்க மறுத்து அடம்பிடித்து ரகளையில் ஈடுபட்டார்.

மின்சாரம் பாய்ந்தது

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பஸ்நிலைய புறக்காவல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அருகில் செல்லும் மின்வயரை எட்டிப்பிடித்து இழுத்தார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கூலித்தொழிலாளி

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ் கூண்டு மீது ஏறி மின்வயரை பிடித்த வாலிபர், தருமத்துபட்டியை அடுத்த கோம்பையை சேர்ந்த சடையாண்டி மகன் வேல்முருகன் (வயது 20) என்பது தெரியவந்தது.

மேலும் கூலித்தொழிலாளியான அவர் நேற்று முன்தினம் திண்டுக்கல்லுக்கு வந்து உள்ளார். அதிகாலையில் அவர், போலீஸ் கூண்டு மீது ஏறி ரகளையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்