சிகிச்சைக்கு வந்த தொழிலாளி திடீர் சாவு
வாணியம்பாடியில் சிகிச்சைக்கு வந்த தொழிலாளி திடீர் என இறந்ததால், உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
திடீர் சாவு
வாணியம்பாடி, காதர்பேட்டை கல்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32), தொழிலாளி. இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவருடைய உறவினர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது டாக்டர்கள் ஊசி மருந்து வெளியில் வாங்கி வருமாறு அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தபோது விஜயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உறவினர்கள் முற்றுகை
இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமாரின் தாய் அலமேலு மற்றும் உறவினர்கள் விஜயகுமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது நன்றாக நடந்து வந்ததாகவும், அப்போது டாக்டர்கள் நெஞ்சு வலிக்கு மருத்துவமனையில் ஊசி இல்லை வெளியில் வாங்கி வாருங்கள் என்று கூறி விட்டு சென்றவர்கள் நீண்ட நேரமாக சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதாலும், தாமதமாக சிகிச்சை அளித்தததாலும் அவர் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாசில்தார் சாந்தி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த விஜயகுமாருக்கு சுபாஷினி என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணிநேரம் மருத்துவமனையில் பரப்பரப்பு ஏற்பட்டது.