ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராகும் காலம் கனிந்து விட்டது- ஆர்.பி.உதயகுமார் பேச்சு

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராகும் காலம் கனிந்து விட்டது என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

Update: 2023-09-02 22:25 GMT


ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராகும் காலம் கனிந்து விட்டது என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

44 சதவீதம் பேர்...

மதுரை புறநகர் அ.தி.மு.க. மேற்கு மாவட்டம், மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனை கூட்டம் குமாரத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க.வில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். ஜெயலலிதா காலத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்தனர், தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதுவரை 2 கோடியே 44 லட்சம் தொண்டர்கள் உருவாகி உள்ளனர். இன்றைக்கு எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் சிம்மசொப்பனமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடந்த மாநாட்டில் 15 லட்சம் பேர் மைதானத்திற்குள் வந்திருந்தனர். மைதானத்திற்கு வெளியே 35 லட்சம் பேர் குவிந்து இருந்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களும் மாநாட்டை வாழ்த்தினர். அதனையெல்லாம் உளவுத்துறை அறிக்கையாக கொடுத்ததில் தி.மு.க அரண்டு போய் உள்ளது. காவல்துறை எந்த பாதுகாப்பும் வழங்காத நிலையில், எந்த சலசலப்பும் இல்லாமல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

தமிழகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 44 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று ஆதரவு தந்துள்ளனர். அதில் 14 சதவீதம் பேர்தான் ஸ்டாலினுக்கு ஆதரவு தந்து உள்ளனர்.

முதல்-அமைச்சர் ஸ்டாலின் கேரளாவில் கொண்டாடப்படும் பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறுகிறார். ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூற மறுக்கிறார். தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார்

இதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொடுத்து உள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார். அதே போல், எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மீண்டும் முதல்-அமைச்சர் ஆகும் காலம் கனிந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆர்யா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்