மயிலம் அருகேமுனீஸ்வரன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மயிலம் அருகே முனீஸ்வரன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-26 18:45 GMT

மயிலம், 

மயிலம் அருகே தென்களவாய் கிராமத்தில் முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பழனி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இக்கோவிலுக்கு வந்த மர்மநபர்கள் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து உடைத்து அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு, கோவிலின் பின்புறம் தூக்கி வீசிச் சென்றுவிட்டனர்.

நேற்று காலை பூசாரி பழனி வழக்கம்போல் கோவிலை திறக்க வந்தபோது, உண்டியல் பணம் கொள்ளைபோனதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் இதுபற்றி ஊர் முக்கியஸ்தர்களுக்கும், மயிலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உண்டியலில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். இதனிடையே விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் ராக்கி கொள்ளை நடந்த கோவிலில் இருந்து அங்குள்ள மெயின்ரோடு வரை ஓடிச்சென்று நின்றது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளை நடந்த கோவில் உண்டியலில் ரூ.30 ஆயிரம் இருந்திருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்