சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-02 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

74 ஆயிரத்து 341 எக்டேர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா,தாளடி சாகுபடிக்கு 74 ஆயிரத்து 341 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 115 எக்டேர் நேரடி விதைப்பும், 33 எக்டேரில் சாதா நடவு, 48 எக்டேரில் திருந்திய சாகுபடியில் நடவு முடிவடைந்துள்ளது. சம்பா, தாளடி பருவத்திற்கு உகந்த நீண்டகால, மத்திய கால நெல் ரக விதைகளான ஆடுதுறை 51, சி.ஆர்.1009, சப்-1, டி.கே.எம். 13 ஆகிய விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விதை கிராமத்திட்டத்தில் ஒரு கிலோவிற்கு ரூ. 17.50 மானியமும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை விவசாயிகளுக்கு 60 மெட்ரிக் டன் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டுள்து.

812 மெட்ரிக் டன் விதைகள்

812 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் தனியார் விற்பனை நிலையங்கள், விரிவாக்க மையங்கள் என்று 2 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரங்கள் யூரியா 2 ஆயிரத்து 644 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 2078, பொட்டாஷ் 827 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ், சூப்பர்பாஸ்பேட் உரங்கள் 74 மெட்ரிக் டன் என்று மொத்தம் 5 ஆயிரத்து 331 மெட்ரிக் டன் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சிதிட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 47 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம மக்கள், விவசாயிகளின் தேவைகள் கண்டறியப்பட்டு விரிவான திட்ட அறிக்கைகளாக தயார் செய்யப்பட்டுள்ளது. கிராம வேளாண் முன்னேற்றக்குழு உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டு வருகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்