காடுபோல் காட்சி அளிக்கும் அரச நிலையிட்டான் ஏரி

காடுபோல் காட்சி அளிக்கும் அரச நிலையிட்டான் ஏரியை தூர்வாரி பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-26 18:39 GMT

75 ஏக்கர் பரப்பளவு

அரியலூர் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ளது அரச நிலையிட்டான் ஏரி. இந்த ஏரி சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரிக்கு வஞ்சித்தான் ஓடை எனும் காட்டோடையிலும் மற்றும் நகர்பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. இந்த ஏரியிலிருந்து மதகு மூலம் அருகே உள்ள சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட குறிஞ்சான் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது. அரச நிலையிட்டான் ஏரி 25 சதவீத தண்ணீர் கொள்ளளவு அடைந்தாலே அங்கிருந்து குறிஞ்சான் குளத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் மதகு அந்த காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சான் குளத்திலிருந்து மதகு மூலம் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் மூலம் விவசாயிகள் நெல், கம்பு, வெள்ளரி, சோளம் என பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

காடுபோல்

இந்நிலையில், அரச நிலையிட்டான் ஏரி சீமைக்கருவேல மரம் மற்றும் காட்டாமணக்கு சூழ்ந்து காடுபோல காட்சியளிக்கிறது. இதனால், தற்போது ஏரி இருப்பதே தெரியாத நிலையில் உள்ளது. மேலும் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருந்ததால் ஏரியின் 75 சதவீத பகுதி மேடாக காட்சியளிக்கிறது. மீதமுள்ள பகுதி மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியாக உள்ளது. சீமைக்கருவேல மரங்கள், காட்டாமணக்கு, தாமரை மற்றும் பல்வேறு வகையான கோரை செடிகளும் முளைத்து உள்ளதால் ஏரியினுள் யாரும் இறங்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போர் கொசுக்களினால் அவதியடைகின்றனர். மேலும், இந்த ஏரி தூர்வாரப்படாததால் நான்கு புறமும் உள்ள கரைகள், முழுவதுமாக சேதமடைந்து முட்கள் முளைத்து காணப்படுகிறது. இதனால் கரைகளில் நடந்து செல்ல இடமே இல்லை என கூறலாம்.

பொழுதுபோக்கு பூங்கா

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த ஏரி அரியலூரிலேயே பெரிய ஏரியாகும். இந்த ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தினால், முழு கொள்ளளவு தண்ணீரை சேமிக்க முடியும். இதனால், அரியலூரில் நீர்மட்டம் உயரும். மேலும், இந்த ஏரியின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் மழை காலங்களில் நெல் சாகுபடியினையும், கோடைக்காலங்களில் வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும். மேலும், அரியலூரில் சிறுவர்கள், மக்கள் பொழுது போக்கும் படியான இடம் ஏதும் இல்லை. பஸ் நிலையம் பகுதியில் உள்ள செட்டிஏரியில் மக்கள் பொழுது போக்கும் வகையில், கரைகளில் நடைபாதை அமைக்கப்பட்டு, நிழல் தரும் மரங்கள் நடப்பட்டிருந்தாலும் அது சிறிய ஏரியாக இருப்பதால் மக்கள் தாராளமாக சென்றுவர முடிவதில்லை.

மேலும், பஸ் நிலையம் அருகிலேயே செட்டிஏரி இருப்பதால் எப்போதும் சத்தமாக காணப்படுகிறது. இதனால் அங்கு மக்கள் அமைதியாக நடைபயணம் மேற்கொள்ள முடிவதில்லை. ஆனால் அரச நிலையிட்டான் ஏரியை தூய்மை படுத்தி பொழுது போக்கு பூங்கா அமைத்துக் கொடுத்தால் சிறுவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பொழுது போக்க ஏதுவாக அமையும். கடந்த ஆண்டு சிமெண்டு ஆலைகளின் பங்களிப்போடு குறிஞ்சான் குளம் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. இதனால், தற்போது அந்த குளம் கடல் போல் காட்சியளிக்கிறது. அதேபோல் அரச நிலையிட்டான் ஏரியையும் தூர்வாரி கரைகளை பலப்படுத்தினால் நன்றாக இருக்கும், என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்