எழும்பூரில் பரபரப்பு: லிப்ட் கேட்பது போல நடித்து மேடை நடன கலைஞரின் பைக்கை பறித்த கொள்ளையர்கள்..!
எழும்பூர் அருகே பைக்கில் தனியாக சென்ற மேடை நடன கலைஞரிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து பைக்கை பறித்து சென்ற 2 பேரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்;
எழும்பூர்:
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் மேடை நடன கலைஞர் சரண்ராஜ் (வயது 24). இவர் சமீபத்தில் நடன நிழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டு சென்னை திரும்பினார். ரெயிலில் சென்னை சென்ட்ரல் வந்து இறங்கிய அவர், அங்கு நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த தனது மோட்டார் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழி மறித்து 2 பேர் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிக்கொண்டனர். எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் வரும்போது அவர்கள் இருவரும் இறங்கினார்கள். பின்னர் நன்றி சொல்வது போல் நடித்து திடீரென்று சரண்ராஜை பிடித்து கீழே தள்ளி விட்டுள்ளனர். அப்போது சரண்ராஜின் பைக்கை இருவரும் பறித்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சரண்ராஜின் பைக்கை பறித்துச்சென்ற புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரை கைது செய்தனர். மேலும் சசிகுமாரின் நண்பர் தீனா என்பவரை தேடி வருகிறார்கள். சசிகுமாரிடம் இருந்து பைக் மீட்கப்பட்டது. முன் பின் தெரியாதவர்கள் லிப்ட் கேட்டால் கொடுக்கக்கூடாது என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.