சேறும், சகதியுமாக மாறிய சாலை

தேவர்சோலை அருகே தொடர் மழையால் புளியம்வயல்- கரளிக்கண்டி சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-08-01 20:30 GMT

கூடலூர்

தேவர்சோலை அருகே தொடர் மழையால் புளியம்வயல்- கரளிக்கண்டி சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

சேறும், சகதியுமாக மாறியது

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட புளியம்வயல், கரளிக்கண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இதேபோல் புளியம் வயல் கிராமத்தில் ஏராளமான ஆதிவாசி மக்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளுக்காக கூடலூர் மற்றும் தேவர்சோலைக்கு வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் புளியம்வயலில் இருந்து கரளிக்கண்டிக்கு 3 கி.மீட்டர் தூரம் மண் சாலை செல்கிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சாலையாகவே உள்ளது. இதனால் மழைக்காலத்தில் சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர்.

தார் சாலை

இதனால் தார் சாலை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து மண் சாலையாகவே இருந்து வருகிறது. மேலும் அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் எந்த வாகனங்களும் அப்பகுதிக்கு வருவதில்லை. மேலும் வாகனங்கள் சேற்றில் சிக்கும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை சந்தித்து புளியம்வயல்-கரளிக்கண்டி இடையே தார் சாலை அமைக்க முறையிடப்பட்டு வருகிறது. தேர்தல் காலங்களிலும் வாக்குறுதிகள் அளிக்கப்படுகிறது. பின்னர் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என விளக்கம் அளிக்கின்றனர். ஆனால், சாலை அமைப்பதில்லை. அந்த நிதியை வேறு பணிகளுக்கு ஒதுக்கி விடுவதாக கூறப்படுகிறது. இதனால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சாலையை பயன்படுத்தி வருகிறோம். எனவே, தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்