வனத்துறை தடையால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலை

கடமலை-மயிலை ஒன்றியத்தில் வனத்துறை தடையால் சாலைகள் குண்டு, குழியுமாக காட்சி அளிக்கிறது.

Update: 2023-07-05 19:30 GMT

வருசநாடு அருகே கீழபூசனூத்து முதல் கல்லுருண்டான்சுனை வரை உள்ள தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதையடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று புதிய தார்சாலை அமைக்க ரூ.96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்க முதற்கட்ட பணிகள் நடைபெற்றது. அப்போது சாலையில் குறிப்பிட்ட தூரம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வருவதாக கூறி, பணிகள் நடைபெறுவதற்கு கண்டமனூர் வனத்துறையினர் தடை விதித்தனர். ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் நடைபெறாமல் உள்ளது.

இதேபோல் கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு-வாலிப்பாறை, தாழையூத்து-கருமலைசாஸ்தாபுரம், முருக்கோடை-உருட்டிமேடு, சிதம்பரவிலக்கு-மண்ணூத்து, வாலிப்பாறை-தண்டியக்குளம், தும்மக்குண்டு-வண்டியூர் உள்ளிட்ட ஏராளமான சாலைகள் வனத்துறையினர் தடை காரணமாக சீரமைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மேலும் மேகமலை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம் ஆகிய ஊராட்சிகளில் எந்தவித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ள வனத்துறையினர் அனுமதி வழங்குவதில்லை. இதன் காரணமாக விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்