மோட்டார் சைக்கிள் திருடன் என நினைத்து தொழிலாளிக்கு பொதுமக்கள் தர்மஅடி
தேனியில் மோட்டார் சைக்கிள் திருடன் என நினைத்து தொழிலாளிக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
தேனியில் மோட்டார் சைக்கிள் திருடன் என நினைத்து தொழிலாளிக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
மோட்டார் சைக்கிள் திருடன்
தேனி உழவர் சந்தை அருகில் நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அங்கு சில மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒரு மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவருக்குள் கைவிட்டு அவர் ஏதோ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் சிலர், அந்த நபர் மோட்டார் சைக்கிளை திருட முயன்றதாக நினைத்து அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பேசியதில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த நபரை திருடன் என நினைத்து தர்ம அடி கொடுத்தனர். பொதுமக்கள் அடித்து உதைத்த தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அந்த நபரை பிடித்து தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
கூலித்தொழிலாளி
விசாரணையில், அவர் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. மேலும் அவர் தனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரியாது என்றும், தான் திருட வரவில்லை என்றும் கூறினார். பின்னர் அவருடைய தந்தைக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவரும் தனது மகனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட தெரியாது என்றும், மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் போதையில் சுற்றித்திரிவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தேனியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.