போலீஸ் அதிகாரி பல் பிடுங்கிய விவகாரம்:விசாரணை குழு அறிக்கையை வழங்ககோரி ஐகோர்ட்டில் மனு

போலீஸ் அதிகாரி பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா விசாரணை குழு அறிக்கையை தர வேண்டும் என குற்றம் சுமத்தப்பட்டவர் சார்பில் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-09-20 01:04 GMT


போலீஸ் அதிகாரி பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா விசாரணை குழு அறிக்கையை தர வேண்டும் என குற்றம் சுமத்தப்பட்டவர் சார்பில் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது.

பல் பிடுங்கிய விவகாரம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்ட விரோத காவலில் அடைத்து வைத்ததுடன், என்னை கடுமையாக தாக்கினர். இதில் எனது 4 பற்கள் உடைந்தன. அத்துடன், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலரது பற்களையும் பிடுங்கி உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் சித்ரவதை செய்தார். இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

விசாரணை அறிக்கை

அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வழங்க வேண்டும். போலீசார் தாக்கியதில் பற்கள் உடைந்த எனக்கு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணையின் அறிக்கையையும் எனக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், வழக்கின் தீவிரத்தை அறிந்து அரசு விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்