மாணவருக்கு, மொரீசியஸ் மருத்துவ கல்லூரி முகவர் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மாணவருக்கு, மொரீசியஸ் மருத்துவ கல்லூரி முகவர் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2022-10-17 20:21 GMT

கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவர் போலீஸ் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ரெனால்ட் ஏசுதாசன்(வயது 21). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மொரீசியஸ் நாட்டில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், சென்னையில் உள்ள அந்த கல்லூரியின் முகவர் மூலம் விண்ணப்பித்து, சேர்ந்துள்ளார். அப்போது அவரது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை முகவரிடம் சமர்ப்பித்து கல்விக் கட்டணமாக ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தியுள்ளார்.

இதையடுத்து ஒரு ஆண்டு காலம் அந்த கல்லூரியில் படித்த அவர், அந்த கல்லூரி இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்துவிட்டார். இந்நிலையில் தான் செலுத்திய கல்விக் கட்டணத்தை கல்லூரியும், அதன் முகவரும் திரும்ப வழங்க வேண்டும் என்றும், அவர்களது சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கடந்த ஜூலை மாதம் மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில், மாணவர் சொந்த விருப்பத்தின்பேரில் கல்லூரியை விட்டு வந்துவிட்டார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அந்த கல்லூரி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறது. ஆனால் கல்லூரியின் சென்னை முகவர் மாணவரின் அசல் சான்றிதழ்களை 2 ஆண்டுகள் கால தாமதம் செய்து வழங்கியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முகவர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே கல்லூரியின் முகவர், அந்த மாணவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை 4 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த ஆணையத்தில் நேற்று மொத்தம் 20 வழக்குகள் விசாரிக்கப்பட்டதில், 10 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற 10 வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்