மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 102 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 102 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறியல் போராட்டம்
சிவகங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இவைகளை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து மாவட்ட செயலாளர் கருப்பசாமி தலைமையிலும் ஒன்றிய செயலாளர் உலகநாதன் தென்னரசு ஆகியோர் முன்னிலையிலும் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணியம்மா, சுரேஷ் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், உமாநாத், திருநாவுக்கரசு, சண்முகப்பிரியா, மெய்யப்பன் உள்பட ஏராளமானவர்கள் சிவகங்கை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் செய்ய சென்றனர். தபால் நிலையத்துக்கு சற்று முன்பாக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 34 பெண்கள் உட்பட 102 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
எஸ்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுராமன் தலைமை தாங்கினார். சிங்கம்புணரி தாலுகா செயலாளர் காந்திமதி, மாவட்ட குழு உறுப்பினர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மத்திய அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து எஸ்.புதூரில் உள்ள வங்கியை முற்றுகையிட ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.