லாரி சக்கரத்தில் சிக்கி கால் துண்டாகி வங்கி பெண் அதிகாரி பலி - தோழி படுகாயம்

வானகரம் அருகே கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி கால் துண்டாகி வங்கி பெண் அதிகாரி பலியானார். அவருடைய தோழி படுகாயம் அடைந்தார்.

Update: 2023-01-05 07:44 GMT

சென்னையை அடுத்த மாங்காடு, அம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா (வயது 27). இவருடைய தோழி ரோகிணி (24). இவர், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தனர். நித்யா, அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தோழிகள் இருவரும் ஒரே மொபட்டில் அம்பத்தூரில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். நித்யா மொபட்டை ஓட்டினார். அவருக்கு பின்னால் ரோகிணி அமர்ந்து இருந்தார்.

மதுரவாயல் அடுத்த வானகரம் சிக்னல் அருகே வந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி இவர்களது மொபட் மீது மோதியது. இதில் ேதாழிகள் இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். அவர்கள் மீது கன்டெய்னர் லாரி சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் நித்யாவின் இடுப்பு பகுதியில் லாரி சக்கரம் ஏறியதால் கால்கள் இரண்டும் நசுங்கியது. ஒரு கால் அதே இடத்தில் துண்டானது. ரோகிணின் ஒரு காலில் லாரி சக்கரம் ஏறியதால் அவரும் படுகாயம் அடைந்தார்.

தோழிகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் வலியால் அலறி துடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் படுகாயம் அடைந்த 2 பெண்களையும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நித்யாவின் மற்றொரு காலும் ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டது. 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் விபத்தில் 2 கால்களும் துண்டான நிலையில் நித்யா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தோழி ரோகிணி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

பலியான நித்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கன்டெய்னர் லாரி டிரைவரான மோகன் (32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலையின் பல பகுதிகளில் மேடு பள்ளமாக உள்ளது. போதிய சாலை தடுப்புகள், அறிவிப்பு பலகைகள், ஒளிரும் விளக்குகள் இல்லை.

ஏற்கனவே உள்ள சாலைக்கும், விரிவாக்கம் செய்யப்படும் சாலை பகுதிக்கும் இடையே அதிக அளவு மேடு, பள்ளம் உள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து விபத்துகளில் சிக்குகிறார்கள். கடந்த 2 மாதங்களில் வானகரம் முதல் வேலப்பன்சாவடி வரையில் மோசமான சாலையால் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்